நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை
கண்டி, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் அமைந்துள்ள சில நீர் வழங்கல் திட்டங்கள் அதிகபட்ச திறனில் இயங்காததால், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த சபை, நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் இயங்கும் பல நீர் வழங்கல் திட்டங்களின் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் சபையினால் நாடு முழுவதும் 343 நீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றில் 156 நீர் வழங்கல் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள சபை, இதன் காரணமாகச் சபையினால் வழங்கப்படும் நீரைப் பயன்படுத்தும் பெருமளவான பாவனையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டங்களில் 126 திட்டங்கள் இன்று (02) காலை வேளையில் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மேலும் 30 நீர் வழங்கல் திட்டங்களை இயங்கும் நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீர் வழங்கல் சபையின் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், இதற்காக அச்சபையின் ஓய்வுபெற்ற ஊழியர்களும் தன்னார்வமாக முன்வந்துள்ளதாகவும் அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

