தலவாக்கலையில் வர்த்தக நிலையத்தில் ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் மற்றும் பணம் திருட்டு!
சந்தேக நபரைக் கண்டறிய CCTV காட்சிகள் மூலம் பொதுமக்களின் உதவி கோரிக்கை
தலவாக்கலை நகரில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பாதுகாப்புக் கமரா கட்டமைப்புகளை விற்பனை செய்து பொருத்தும் வர்த்தக நிலையத்திற்குள் கடந்த 25ஆம் திகதி இரவு நுழைந்த நபரொருவர், அங்கிருந்த கையடக்கத் தொலைபேசிகள், பணம் மற்றும் தங்க மோதிரம் ஒன்றைத் திருடிச் சென்றுள்ளார்.
திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் மொத்த பெறுமதி ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் (ரூ. 500,000) அதிகம் என குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV பாதுகாப்புக் கமரா கட்டமைப்பில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இந்தக் காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ள போதிலும், சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
CCTV காட்சிகளில் காணப்படும் நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது அவரை அடையாளம் காணக்கூடியவர்கள், உடனடியாகத் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

