தடைப்பட்ட நீர் விநியோகம் மூன்று நாட்களுக்குள் வழமைக்கு

தடைப்பட்ட நீர் விநியோகம் மூன்று நாட்களுக்குள் வழமைக்கு

நாட்டை பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகத்தை மூன்று நாட்களுக்குள் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியாளர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்தார். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின்படி, பாவனையாளர்களுக்கு நீர் விநியோகத்தை உடனடியாக வழங்குவதற்காக முப்படைகள், நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மின்சார சபையிடமிருந்து உதவி பெறப்பட்டுள்ளதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார். 

முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். 

கடந்த சில தினங்களில் நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக, பல மாவட்டங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் பம்பி நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், கண்டி மாவட்டத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் பம்பி நிலையங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார். 

எஸ். ரஜீவன்