டெங்கு, சிக்குன்குனியா தொற்றுகள் வேகமாக அதிகரிப்பு
பருவமழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்று, பொருத்தமான இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என விசேட மருத்துவர் மஹேஷக விஜயவர்தன எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், இதில் மேல் மாகாணம், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த சில வருடங்களாகக் குறைவடைந்திருந்த சிக்குன்குனியா தொற்றுகளும் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து விசேட மருத்துவர் மஹேஷக விஜயவர்தன ,
டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஆகிய இரண்டுமே ‘ஏடிஸ்’ (Aedes) நுளம்புகள் மூலம் பரவுகின்றன.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டு வலி மற்றும் தோலில் ஏற்படும் தடிப்புகள் போன்ற ஒத்த அறிகுறிகளுடன் இவை ஆரம்பிப்பதால், ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறிவது கடினமாக உள்ளது.
டெங்கு தீவிரமடைந்து ‘டெங்கு இரத்தப்போக்கு காய்ச்சலாக’ மாறினால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும்.
காய்ச்சல் குறையத் தொடங்கும் போதே இந்த நோயாளிகள் அதிகளவில் சோர்வடைவர். எனவே, கடுமையான சோர்வு, வயிற்று வலி மற்றும் கைகள் அல்லது கால்கள் குளிர்ச்சியடைதல் போன்ற அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது.
காய்ச்சல் உள்ள நோயாளிகள் ஆரம்ப கட்டத்தில் ‘ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை’ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை டெங்கு நோயாளர்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்

