டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் உதவித்தொகைகளை வழங்க நடவடிக்கை எடுங்கள்!
Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரைாயாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்குபற்றினர்.
வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் ரூ. 25,000, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வழங்கும் ரூ. 50,000 ஆகிய உதவித்தொகைகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், வீடுகள் மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குதல், நாடு பூராகவும் பராமரிக்கப்படும் பாதுகாப்பு மையங்களின் செயல்பாடுகள்,மக்களை மீளக் குடியமர்த்தல்,வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் ஆகியவை இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
இழப்பீடு வழங்கும் செயல்பாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தப் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கவும் எவரையும் கைவிடாத வகையில் இழப்பீடு பெற உரிமை உள்ள அனைவருக்கும் அதனை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், மக்களை மீள்குடியேற்றுவது மற்றும் அதற்குத் தேவையான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், பிரதான மாவட்டங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் தனியான திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் இது தொடர்பாக மீண்டும் கலந்துரையாடல் நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.










