சர்வஜன பலயவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு!
சர்வஜன அதிகாரம் கட்சியின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பிரதேச சபை உறுப்பினர்களைக் கட்சி உறுப்புரிமை மற்றும் உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கியமைக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் (21) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, தவிசாளர் ரொஷான் ரணசிங்கஇ பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி ஜனக கெகிரிதெனிய இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மக்களால் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள், இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு முரணாகப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று விசாரணையின்றிக் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவது கட்சியின் யாப்பை மீறும் செயலாகும் என்பதால், குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பிரதேச சபை உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
இதன்படி, தும்பனே பிரதேச சபை உறுப்பினர்களான டபிள்யூ. காமினி கமல் வீரசிங்க, டிக்கிரி பண்டா இலங்ககோன், பாததும்பர பிரதேச சபை உறுப்பினர் அப்துல் ரஹீம் மொஹமட் நசீர் மற்றும் ஹரிஸ்பத்துவ பிரதேச சபை உறுப்பினர் எகொடகெதர சிசிர குமார ஆகியோர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உறுப்பினர்களைப் பதவிகளிலிருந்து நீக்கும் தீர்மானத்தை கட்சியின் நிறைவேற்றுக் குழு எடுத்திருந்தது. எனினும், அவ்வாறான தீர்மானத்தை எடுப்பதற்கு அந்தக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனடிப்படையில், குறித்த பதவிகளுக்கு வேறு நபர்களை நியமிப்பதையும் தடுக்கும் வகையில், கட்சியின் அதிகாரிகளுக்கு மேலதிகமாக கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கலாநிதி சம்பத் பெர்னாண்டோவுக்கும் நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

