கல்வி அமைச்சில், ஹரிணி பங்கேற்பில் மீலாதுன் நபி விழா
பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் தொடர்பான புரிதலை மக்களிடையே ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வலிமையான கருவி கல்வியாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 மீலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
சமத்துவத்திற்கு முன்னுரிமை அளித்தல், ஆதரவற்றவர்களைக் கவனித்தல், அடிமைத்தனத்தை ஒழித்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காகக் குரல் கொடுத்த தலைவராக முஹம்மது நபி அவர்கள் கருதப்படுகின்றார். அத்துடன், இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை மூலாதாரமான அல்-குர்ஆனையும், முன்மாதிரியான சுன்னாவையும் வழங்கிய மகத்தான போதகராகவும் அவர் வரலாற்றில் போற்றப்படுகின்றார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறியதாவது:
இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களால் மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடப்படும் முஹம்மது நபி அவர்களின் பிறப்பை நினைவுகூரும் மீலாதுன் நபி விழாவில் கலந்துகொள்ள முடிந்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.
நாம் ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களுக்கு முகங்கொடுத்து வரும் உலகில் வாழ்கின்றோம். ஆயுத மோதல்கள் காரணமாக அப்பாவி மக்களின் உயிர்கள் தொடர்ந்தும் பலியாகிக் கொண்டிருக்கின்றன. மில்லியன் கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை, குழந்தைகள் வன்முறை, பாதுகாப்பின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், முஹம்மது நபி அவர்களின் போதனைகளும் முன்மாதிரிகளும் இன்றைய உலகிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
இலங்கை பல்வேறு இனங்கள், மொழிகள், கலாசாரங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த 21.7 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட, பன்முகத்தன்மை நிறைந்த வளமான நாடாகும். இந்தப் பன்முகத்தன்மையை இலங்கையின் மிகப் பெரும் பலங்களில் ஒன்றாக எமது அரசாங்கம் கருதுகின்றது. எனவே, ஒவ்வொரு குடிமகனும் சமமான மரியாதையையும், சமமான வாய்ப்புகளையும், பொது சேவைகளுக்குச் சமமான அணுகலையும் அனுபவிக்கக்கூடிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.
சமூக முன்னேற்றத்தையும் சமத்துவத்தையும் அடைவதற்கான மிகவும் வலிமையான கருவி கல்வி என நாம் நம்புகின்றோம். ஒவ்வொரு குழந்தையும் மதிக்கப்படும் அரசாங்கமாக, ஒரு குழந்தையின் குடும்பப் பின்னணி அல்லது சமூக அந்தஸ்து எதுவாக இருந்தாலும், எமது இலவசக் கல்வியின் மூலம் உயர்கல்வி வரை தொடர்ந்து கற்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.
அத்துடன், எமது பாடசாலைகள் மாணவர்கள் இயன்றவரை ஒருவருடன் ஒருவர் தொடர்பாடி, தமது சொந்தக் கலாசாரத்தை மட்டுமன்றி, ஒருவருடைய கலாசாரத்தை மற்றொருவர் அறிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பளிக்கும் இடங்களாக அமைய வேண்டும் என நாம் நம்புகின்றோம்.
மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் எமது இலவசக் கல்விச் சூழலில் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் சமூகத்தில் மரியாதையை நிலைநாட்டுவதற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகளை உருவாக்குவதை நாம் எதிர்பார்க்கின்றோம்.
அதேவேளை, எமது புதிய கல்வி மறுசீரமைப்புகளின் ஊடாக புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமன்றி, கற்றல்-கற்பித்தல் முறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம் சமூகத்தில் நடைமுறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான தன்னம்பிக்கையை மாணவர்களிடையே உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
அதுமட்டுமன்றி, நாம் அனைவரும் நல்லிணக்கத்துடனும் கண்ணியத்துடனும் வாழக்கூடிய சிறந்த சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பங்களிக்கக்கூடிய எதிர்காலக் குடிமகனை உருவாக்குவதும் எமது புதிய கல்வி மறுசீரமைப்பு செயற்பாட்டின் அடிப்படைப் பொறுப்பாகக் கருதப்படுகின்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கல்வியில் புதியதொரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வரும் இவ்வேளையில், முஹம்மது நபி அவர்கள் எடுத்துக்காட்டிய முன்மாதிரிகள் முக்கியத்துவத்துடன் கருதப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். ஒவ்வொரு குழந்தையும் கல்வியிலிருந்து விலகாமல், அனைவருக்கும் சமமான கல்வி உரிமைகளை வழங்குவதற்காக உள்ளடக்கிய கல்வி (Inclusive Education) உள்ளிட்ட விடயங்களுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புகளின் ஊடாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அவர்கள், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். எம். எம். தமீம் அவர்கள், முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் மேஜர் என். டி. நஸுமுத்தீன் அவர்கள் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

