கரையைக் கடந்தது மோந்தா சூறாவளி
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ‘மோந்தா’ சூறாவளி நேற்று (28) இரவு ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடந்தது.
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

