உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு 5,000 வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு 5,000 வீடுகள் மக்களிடம் கையளிப்பு! –

டிசம்பர் 31 இற்குள் 30,000 வீடுகள் நிர்மாணிக்க இலக்குஉலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 5,000 வீடுகளை மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.உலக குடியிருப்பு தின நிகழ்வு இன்று (05) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறவுள்ளதுடன், இம்முறை “அனைவருக்கும் பாதுகாப்பான வீடு” என்ற தொனிப்பொருளில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் குடியிருப்பு வாரமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 30,000 வீடுகளை நிர்மாணிப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனவும், ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான வீடொன்றை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.வீடுகள் வழங்கும்போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதுடன், சமூகப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படும் ஒரு வீடு 550 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்காக ஒரு வீட்டுக்கு அரசாங்கம் 20 இலட்சம் ரூபாய் செலவிடவுள்ளது.மேலும், யதிவர மாதாபிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் ஒரு வீட்டுக்கு ரூ. 15 இலட்சமும், நிறுவனங்களில் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வீடொன்றுக்கு ரூ. 20 இலட்சமும் ஒதுக்கப்படவுள்ளது.

அத்துடன், ‘Ditwah’ சூறாவளி காரணமாக முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இதனிடையே, அரச ஊழியர்களுக்கான வீடமைப்புக் கடன்களுக்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் கடன்களுக்கான வட்டி வீதத்தில் 4 சதவீதத்தை அரசாங்கம் ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்கள் வங்கிகள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரையிலான கடனை 15 சதவீத வட்டி வீதத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அந்தக் கடனுக்கான வட்டியின் ஒரு பகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.குறைந்த வருமானம் பெறுவோரை வீடுகளுக்காக தெரிவு செய்யும் நடவடிக்கை எந்தவொரு அரசியல் தொடர்பு அல்லது செல்வாக்கின் அடிப்படையிலும் இடம்பெறாது என வலியுறுத்திய அமைச்சர், இதற்காக பிரதேச செயலகத்தின் வீடமைப்பு அதிகாரியை சந்தித்து தேவையான தகவல்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

manel