“ஈஸ்வா புப்! கோயில் மூடப்போகிறது”: இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய மலிங்கவின் சுவாரஸ்யமான பதிவு!
இலங்கை கிரிக்கெட் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளன.
குறித்த போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், இலங்கையில் அண்மைக்காலமாகப் பேசுபொருளாகியுள்ள மாந்திரீக சடங்குகளுடன் தொடர்புடைய உருவப் பொம்மையின் படத்தைப் பகிர்ந்த மலிங்க, போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைவரும் ஒன்றிணைந்து எதிரணிக்குச் சாபமிடும் வகையில் ஒரு ‘மந்திரத்தை’ மேற்கொள்ளுமாறு நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கிரிக்கெட்டை நேசிக்கும் TikTok பயனர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தி, அந்தச் ‘சாபத்தை’ ஏவுமாறும் அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மலிங்க மற்றுமொரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், “ஈஸ்வா புப்! கோயில் மூடப்போகிறது. நான் தூங்கச் செல்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பௌத்த பிக்குகள் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, ஜனாதிபதியின் உருவத்தை ஒத்த பொம்மையைப் பயன்படுத்தி சூனியச் சடங்கு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்தப் பின்னணியிலுள்ள உருவப் பொம்மையின் படத்தைப் பகிர்ந்து லசித் மலிங்க வெளியிட்டுள்ள பதிவுகள் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளன.

