இந்திய உதவியுடன் காலியில் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
- யக்கலமுல்லை தலங்கஹ தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘திதுல’ மாதிரிக் கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் பிரதான நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் மாதிரிக் கிராம வீடமைப்புத் திட்டத்தின் கீழ், காலி மாவட்டம் யக்கலமுல்லை தலங்கஹ தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘திதுல’ கிராமம் பயனாளிகளிடம் நேற்று (22) மாலை கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் எம்.எச். சுசில் ரணசிங்க, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க யூ. கமகே, ஹம்பாந்தோட்டைக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சல் ஜெனரல் ஹர்விந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் அரவிந்த சிறிநாத உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டத்தின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வீடமைப்புத் திட்டத்தின் மூலம், பிரதேசத்தைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் காலி மாவட்ட அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

