இடமாற்ற உத்தரவு இடைநிறுத்தம்; மருத்துவர் வேலைநிறுத்தம் இரத்து
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) மேற்கொள்ளவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான தற்போதைய நிலை குறித்து சங்கம் ஓர் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களை ஒழுங்கற்ற முறையில் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக இன்று (31) தொழிற்சங்க நடவடிக்கையை அறிவிக்க நேர்ந்ததாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை 08.00 மணிக்கு நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க சங்கம் தீர்மானித்திருந்த நிலையில், நேற்றைய தினம் (30) சங்கத்தின் நிறைவேற்றுக் குழுப் பிரதிநிதிகள் சுகாதார அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் தொலைபேசி மூலம் சிறப்பு கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலின்போது, இடமாற்றப் பிரச்சினை தொடர்பில் பல இணக்கப்பாடுகளுக்கு வந்ததாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், இடமாற்றச் செயல்முறை தொடர்பான கால அட்டவணையை எழுத்து மூலம் வெளியிடுவதற்கும் சுகாதார அமைச்சுக்குச் சிறிது கால அவகாசம் அளிக்கும் நோக்கில், காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கவிருந்த வேலைநிறுத்தத்தை பிற்பகல் 12.00 மணி வரை ஒத்திவைக்க தீர்மானித்ததாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
பின்னர், இணக்கப்பாட்டின்படி, ஒழுங்கற்ற இடமாற்ற உத்தரவுகளை இடைநிறுத்தி, முறையான இடமாற்ற நடைமுறைக்கு இணங்க, அதற்கான கால அட்டவணையுடன் கூடிய கடிதத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
எனவே, இன்று (31) நண்பகலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, இந்த விடயங்கள் அனைத்தும் மீளாய்வு செய்யப்பட்டு, இன்று திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

