அவசர ஒத்திவைப்பு விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல்களின் காரணத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் இன்று (07) விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் .
ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரண்டு தினங்களுக்குள் நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பாரதூரமான அமைதியின்மை மற்றும் மோதல்கள் காரணமாக, அறிக்கை செய்யப்பட்டுள்ளதன் பிரகாரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். எனவே, மேற்கூறிய மரணங்கள் மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்.
அதற்கிணங்க, இவ்விடயத்திலுள்ள பாரதூரத்தன்மை மற்றும் அவசரத் தன்மையைக் கருத்திற்கொண்டு, இது தொடர்பாக பாராளுமன்றத்தின் அவசர கவனத்தைச் செலுத்துவதற்காக நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றிற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

