அம்பாறையில் சினிமா பாணியில் போதைப்பொருள் கும்பல் கைது!
சாய்ந்தமருது பகுதியில், கார் ஒன்றில் போதைப்பொருள் கடத்திச் சென்ற கும்பலைத் திரைப்பட பாணியில் துரத்திச் சென்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டினைப் பெற்றுள்ளது.
நடுரோட்டில் சினிமா ஆக்ஷன்
கல்முனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாகக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில், சனிக்கிழமை (4) அதிகாலை 3 மணியளவில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்க தலைமையிலான குழுவினர் அங்கு சோதனைக்குச் சென்றனர்.
அப்போது, அவ்வீட்டிலிருந்து கார் ஒன்றில் இருவர் தப்பி ஓடினர். அவர்களுக்கு வழிகாட்டியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றொருவரையும் கவனித்த பொலிஸார், அவரை உடனடியாகக் கைது செய்தனர்.
தொடர்ந்து, தப்பியோடிய காரை மறிப்பதற்காகப் பொலிஸ் பரிசோதகர் ரத்னாயக்க, அந்த மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி காரைத் துரத்தினார்.
சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே காரை நெருங்கிய அவர், ‘மங்காத்தா’ திரைப்பட பாணியில் தனது தலைக்கவசத்தால் (Helmet) காரின் மீது எறிந்து அதனை அதிரடியாகத் தடுத்து நிறுத்தி, காரில் இருந்த இருவரையும் மடக்கிப் பிடித்தார்.
பறிமுதல் மற்றும் விசாரணை
கைது செய்யப்பட்ட 32, 33, 34 வயதுடைய மூன்று சந்தேக நபர்களிடமிருந்து பின்வரும் பொருட்கள் மீட்கப்பட்டன:
15 கிராம் 370 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள்
சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்
இரு கைத்தொலைபேசிகள், வங்கி அட்டைகள் மற்றும் ஒரு தொகை பணம்
பொலிஸார் வருவதற்குச் சற்று நேரத்திற்கு முன்னர்தான், அவ்வீட்டிலிருந்து கிலோ கணக்கிலான போதைப்பொருட்கள் பல பகுதிகளுக்கும் விநியோகஸ்தர்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தடயவியல் மற்றும் மோப்ப நாய் பிரிவினரும் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டன
தொடரும் அதிரடி
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் வழிகாட்டலில் இந்த வெற்றிகரமான கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, கடந்த மாதமும் இப்பகுதியைச் சேர்ந்த “கடவுளின் பிள்ளை” என அழைக்கப்படும் 23 வயது பெண் போதைப்பொருள் கடத்தல்காரரை இப்பொலிஸ் குழுவினர் கைது செய்தபோது, ஊர் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது
சந்தேக நபர்கள் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

