அமெரிக்க – இலங்கை பேரனர்த்த தயார்நிலை தொடர்பான பயிற்சி

அமெரிக்க – இலங்கை பேரனர்த்த தயார்நிலை தொடர்பான பயிற்சி

ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம்பெற்ற இயற்கையனர்த்தங்கள் மற்றும் மனிதாபிமான அவசரநிலைகளை எதிர்கொள்வதற்கான தயார்நிலையினை பலப்படுத்துவதில் கவனம் செலுத்திய மூன்று நாள் பயிலரங்கங்கிற்காக அமெரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் காலியில் ஒன்று கூடினர். 

இலங்கையின் பாதுகாப்பமைச்சிற்கும் மொன்டானா தேசிய காவற்படைக்குமிடையில் 2025 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையிலமைந்த இப்பயிலரங்கினை, அமெரிக்க பசிபிக் கட்டளைப்பீடத்தின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை சிறப்பாக மேற்கொள்ளல் தொடர்பான மத்திய நிலையம் (CFE-DM), மொன்டானா தேசிய காவற் படை மற்றும் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஏற்பாடு செய்தது. நிபுணர்களால் வழிநடத்தப்பட்ட இப்பயிலரங்கானது, ஒரு யதார்த்தமான அவசரகாலச் சூழ்நிலையின்போது ஒருங்கிணைப்பை பரிசோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கலந்துரையாடல் அடிப்படையிலான பயிற்சியுடன் நிறைவடைந்தது. 

மாறிவரும் பேரனர்த்த நிலைமைகளுக்கேற்ப செயற்படுவதற்கும், வளங்களை ஒருங்கிணைப்பதற்கும், பொதுத் தகவல்தொடர்புகளை முகாமை செய்வதற்கும், அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளின் கீழ் முக்கியமான முடிவுகளை மேற்கொள்வதற்கும் பங்கேற்பாளர்களுக்கு இதில் பயிற்சியளிக்கப்பட்டது. 

டித்வா சூறாவளி உள்ளிட்ட சமீபத்திய பேரனர்த்தங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, நெருக்கடி நிலைமைகளின்போதான பதிலளிப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேற்கொள்வதற்கான திட்டங்களை உருவாக்குதல், பல்வேறு முகவரமைப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, ஆகியவற்றிற்கான நடைமுறை அணுகுமுறைகளை இலங்கையின் பல்வேறு முகவரமைப்புகள் தமக்கிடையே பரிமாறிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை இப்பயிலரங்கம் வழங்கியது. 

அமெரிக்காவின் மொன்டானா மாநிலம் முழுவதும் அவசரகால நிலைமைகளின் போது பதிலளிப்புப் பணிகளில் ஈடுபடும் அமைப்புகளாக பணியாற்றியதன் மூலம் பெற்றுக்கொண்ட விரிவான நிஜ உலக அனுபவங்களை மொன்டானாவின் பேரனர்த்த மற்றும் அவசரகால சேவைகளின் (DES) உறுப்பினர்களுடன் இணைந்து மொன்டான தேசிய காவற்படை தன்னுடன் எடுத்து வருகிறது. 

காட்டுத்தீ, வெள்ளம், கடுமையான குளிர்காலப் புயல்கள் மற்றும் ஏனைய பிற பேரனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தமது சமூகங்களுக்கு உதவுவதற்காக அணிதிரண்டு, திட்டமிடல், ஏற்பாட்டியல், தகவல் தொடர்பு, விமானப் போக்குவரத்து உதவி மற்றும் அவசரகால ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம், பேரனர்த்தங்களுக்கான பதிலளிப்புப் பணிகளில் மொன்டான தேசிய காவற்படையின் வீரர்களும், DESஇன் அவசரகால முகாமைத்துவ நிபுணர்களும் ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றனர். 

இலங்கைப் பாதுகாப்பமைச்சுடனான தனது பங்காண்மையினூடாக, பேரனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்பாக, அவற்றை எதிர்கொள்வதற்கான தயார்நிலை மற்றும் பதிலளிக்கும் திறன்களை பலப்படுத்துவதற்கு உதவும் வகையில், இப்பாடங்களையும் சிறந்த நடைமுறைகளையும் மொன்டான தேசிய காவற்படை மற்றும் MT DES என்பன பகிர்ந்து கொள்கின்றன. 

இதில் பங்குபற்றியோரில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை கடலோர காவற் படை, இலங்கைப் பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், பாதுகாப்பமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, சுகாதார அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். 

நேரடித் திட்டமிடல் மற்றும் சூழ்நிலை அடிப்படையிலான பயிற்சிகளூடாக, பங்கேற்பாளர்கள் ஒருங்கிணைப்பை பலப்படுத்தி, பதிலளிக்கும் செயல்முறைகளைச் செம்மைப்படுத்தி, எதிர்கால அவசரநிலைகளை எதிர்கொள்வதற்கான தயார்நிலையினை மேம்படுத்திக்கொண்டனர். 

இந்தோ – பசிபிக் பிராந்தியம் முழுவதும் சமூகங்களைப் பாதுகாப்பதற்கும், முக்கியமான உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வலையமைப்புகளைப் பேணுவதற்கும், பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்கும் செற்திறனுடைய பேரனர்த்த பதிலளிப்புப் பணிகள் உதவியாக அமைவதனால், இப்பிராந்தியத்தில் ஒத்துழைப்புடன் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தினை இப்பயிலரங்கு அடிக்கோடிட்டுக் காட்டியது. 

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை சிறப்பாக மேற்கொள்ளல் தொடர்பான மத்திய நிலையம் (CFE-DM) பற்றி, அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்திலுள்ள Pearl Harbor-Hickam ஒருங்கிணைந்த தளத்திலமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை சிறப்பாக மேற்கொள்ளல் தொடர்பான மத்திய நிலையமானது (CFE- DM) போர்த்திணைக்களத்திற்குரிய ஒரு அமைப்பாக இருப்பதுடன், அமெரிக்க பசிபிக் கட்டளைப் பீடத்தின் நேரடிக் கட்டளையின் கீழ் இயங்கும் ஒரு பிரிவாகும். இந்தோ – பசிபிக் பிராந்தியம் 

முழுவதும் பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, மனிதாபிமான உதவி மற்றும் சிவில் – இராணுவ ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்காக அரச முகவரமைப்புகள், இராணுவங்கள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்நிலையம் செயற்படுகிறது. 

மொன்டான தேசிய காவற்படையினைப் பற்றி: மொன்டானா மாநிலத்தின் ஹெலனா நகரில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள மொன்டானா தேசிய காவற் படையானது, தமது மாநிலம் மற்றும் தமது நாடு ஆகிய இரண்டிற்கும் சேவையாற்றும், சிறப்பாகப் பயிற்சியளிக்கப்பட்ட இராணுவ மற்றும் விமானப்படை வீரர்களைக் கொண்டதாகும். 

இயற்கையனர்த்தங்கள் மொன்டானா மாநிலத்தைப் பாதிக்கும்பேது, பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் உள்ளூர் சிவில் அதிகாரசபைகளுக்கு உதவிசெய்வதற்கு இக்காவற்படை தயாராகவுள்ளது. 

தனது சமஷ்டி அரசின் செயற்பணிகளுக்கான தயார்நிலையைப் பேணுவதில் காவற்படை கொண்டுள்ள அர்ப்பணிப்புடன் இணைந்து இந்த இன்றியமையாத உதவியும் மேற்கொள்ளப்படுகிறது. 

State Partnership Program நிகழ்ச்சித்திட்டத்தினூடாக நிலைபேறான, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பினூடாக பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையினைப் பலப்படுத்துவதற்காக 2021 ஆம் ஆண்டு முதல் மொன்டானா தேசிய காவற்படை இலங்கையுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. 

பேரனர்த்தங்களுக்கான பதிலளிப்புப் பணிகள், கடல்சார் கள விழிப்புணர்வு, மற்றும் தொழில்வாண்மைத்துவ இராணுவக் கல்வி போன்றவற்றில் ஒத்துழைப்பினை விரிவுபடுத்துவதற்காகவும், அவற்றை முறைப்படுத்துவதற்காகவும் மொன்டான தேசிய காவற்படையும் இலங்கை பாதுகாப்பமைச்சும் 2025ஆம் ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

manel