அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்ற பி.எம்.வை.அறபாத் முகைதீன்
பக்கீர் முகைதீன் யாசிர் அறபாத் முகைதீன் என்பவர், மருதமுனை பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவராவார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை தற்போதைய புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர் கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும் கற்றார்.
2002 ஆம் ஆண்டு (SEUSL) இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் B.Sc (Special in Computer Science) பட்டத்தைப் பெற்றதோடு, 2004 ஆம் ஆண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் (OUSL) பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் PGDE, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் (EUSL), 2007 ஆம் ஆண்டு கல்வி முதுமாணிப் பட்டத்தையும் M.Ed பெற்றுக் கொண்டார்.
1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் மூலம் கணித விஞ்ஞான ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டு வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திலும், அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராக செயற்பட்டு, பின்னர் 2006 ஆம் ஆண்டு சம்மாந்துறை வலயக் கணினி வளநிலையத்தில் விரிவுரையாளராகவும் தெரிவு செய்யப்பட்டு சுமார் ஆறு வருடங்கள் கடமையாற்றினார்.
2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை கல்வி நிருவாக சேவைக்கான (SLEAS) போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டு, 2013 ஆம் ஆண்டிலிருந்து ICT உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் மற்றும் முகாமைத்துவத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் மட்டக்களப்பு மத்தி (ஏறாவூர்) வலயத்திலும், முகாமைத்துவம் மற்றும் திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராக கல்முனை கல்வி வலயத்திலும் சுமார் ஆறு வருடங்கள் சேவையாற்றி, ICT இற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் முகாமைத்துவத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலும் சேவையாற்றியுள்ளார்.
இறுதியில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் ICT இற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதி வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை கல்வி வலயத்தில் திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் போது இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் அமைந்துள்ள National University of Education, Planning and Administration (NUEPA) பல்கலைக் கழகத்தில் இடம் பெற்ற Capacity Building Program on Strategic Planning, Financing and Quality Development of Education for Education Officers of Sri Lanka எனும் கற்கை நெறியில் கலந்து கொண்டு பயிற்சியினைப் பெற்றிருந்ததையும் விசேடமாக குறிப்பிட்டுக் கூறலாம்.
அரச துறையில் 27 வருட சேவைக் காலத்தைக் கொண்ட இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் PGDE பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறிற்கான வளவாளராகவும், டியூட்டராகவும், முதன்மையாசிரியராகவும் (Master Teacher for PGDE) நீண்டகாலமாக செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவரின் கல்வித்துறையின், நீண்ட அனுபவமும், சிறந்த ஆளுமையும், அர்ப்பணிப்புகளுடனான கல்வி மற்றும் சமூகப் பணிகளும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் சகல அபிவிருத்தியிலும் இன்ஷா அல்லாஹ் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ள பி.எம்.வை.அறபாத் முகைதீனை உயர் அதிகாரிகள், அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் உத்தியோகத்தர்கள், சமூகமட்டப் பிரதிநிதிகள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.பௌஸ் (நிருவாகம்) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் நிரந்தர வலயக்கல்விப் பணிப்பாளராக பக்கீர் முகைதீன் யாசிர் அறபாத் முகைதீன் இன்று கடமையேற்றுக்
கொண்டார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மைந்திரக்குமார், பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உட்பட பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர் கள் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

