One Million Volunteers திட்டம்: 28,000 இளைஞர், யுவதிகளுக்குமுதலுதவி பயிற்சி

One Million Volunteers திட்டம்: 28,000 இளைஞர், யுவதிகளுக்குமுதலுதவி பயிற்சி

இலங்கையில் சமூக சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தி, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நிரந்தர மாற்றுத்திறன்களை குறைப்பதோடு, பேரிடர் சூழ்நிலைகளில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 28,000 இளைஞர், யுவதிகளுக்கு முதலுதவி பயிற்சி வழங்கும் தேசிய வேலைத்திட்டம் நேற்று முன்தினம் (30) மகரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகியவை இணைந்து இந்த தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. முதலுதவி அறிவை சமூகத்தின் அடிப்படை வாழ்க்கைத் திறனாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
“ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிற்கும் குறைந்தபட்சம் முறையாகப் பயிற்சி பெற்ற இரண்டு இளைஞர் முதலுதவி வழங்குநர்கள்” என்ற கருப்பொருளின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தில், நாடு முழுவதும் 28,000 இளைஞர், யுவதிகளுக்கு முதலுதவி மற்றும் அடிப்படை உயிர்காக்கும் திறன்கள் (Basic Life Support – BLS) தொடர்பான கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதன் மூலம், 14,000 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் பயிற்சி பெற்ற முதலுதவி வழங்குநர்களின் வலையமைப்பை உருவாக்குவது இந்த வேலைத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் இளைஞர்கள், திடீர் விபத்துகள், சாலை விபத்துகள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பிற அவசர சுகாதார நிலைகளில் சரியான முதலுதவி வழங்குதல், காயமடைந்தவர்களை மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு அனுப்புதல் மற்றும் அவசரகால பதிலளிப்பு திறன்களை மேம்படுத்துதல் போன்ற விடயங்களில் பயிற்சி பெறுவர்.

இந்த தேசிய வேலைத்திட்டத்தின் தொழில்நுட்ப மேற்பார்வையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு மேற்கொள்கிறது. நாடு முழுவதும் இதனை நடைமுறைப்படுத்தும் பிரதான ஒருங்கிணைப்பு பொறுப்பு தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்களுக்கான பயிற்சி , மாவட்ட மட்டத்தில் இளைஞர்களைத் தெரிவு செய்தல், நாடு முழுவதும் பயிற்சி மையங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் கிராம மட்டம் வரை வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துதல் ஆகிய பொறுப்புகளை தேசிய இளைஞர் சேவை மன்றம் மேற்கொள்கிறது.

இந்த ஆரம்ப நிகழ்வில், “முதலுதவி மற்றும் அடிப்படை உயிர்காக்கும் திறன்கள்” எனும் கையேடு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு, பயிற்சியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், தென் மற்றும் மேல் மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 இளைஞர், யுவதிகளுக்கான முதல் பயிற்சி நிகழ்ச்சி இன்று ஆரம்பிக்கப்பட்டது. எதிர்காலத்தில் அவர்களுக்கு முதலுதவி உபகரணத் தொகுப்புகள் வழங்கப்படுவதோடு, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இந்த ஆரம்ப நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதிச் சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, இலங்கைக்கான UNICEF பிரதிநிதி எம்மா பிரிக்ஹம், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, நிர்வாகப் பணிப்பாளர் மனுல சமல் பெரேரா, சுகாதார மற்றும் இளைஞர் விவகார அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் பல இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.

manel