பிள்ளையானின் மனுவை விசாரிக்க உயர்மன்றம் அறிவிப்பு
பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
தாம் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்க கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரிவுகள் 12(1) இன் படி சட்டத்தின் முன் சமமற்ற முறையில் நடத்துதல், 12(2) இன் படி அரசியல் கருத்தின் அடிப்படையில் பாகுபாடு), 13(1) இன் படி காரணமின்றி கைது மற்றும் 13(2) இன் படி சட்டத்தின் சரியான செயல்முறை இல்லாமல் கைது ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
மனுதாரர் பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா மற்றும் சட்டத்தரணி உதய கம்மன்பில ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

