வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்த பகுதியில் பாரிய மரம் ஒன்று திடிரென சரிந்து வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்ததில் கார் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் மூன்று மணிநேரம் தடைப்பட்டிருந்ததாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 17.06.2025 செவ்வாய்க்கிழமை இரவு 08.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது கொழும்பு கம்பஹா பகுதியில் இருந்து திம்புள்ள பத்தன பகுதியை நோக்கி பயணித்த கார் வண்டியின் மீது மரம் சரிந்து விழுந்துள்ளதோடு கார் வண்டிக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த காரில் சாரதி மாத்திரம் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வட்டவலை பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இனைந்து மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதை தொடர்ந்து மூன்று மணிநேரத்திற்கு பின்னர் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.