என்னை லேடி சூப்பர்ஸ்டார் என்று கூப்பிட வேண்டாம் – நயன்தாரா வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் வெற்றிகரமான டாப் நடிகைகளில் ஒருவரான நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வந்தனர். இந்நிலையில் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பெருமளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த டாப் நடிகர்களை அவர்களின் ரசிகர்கள் புனை பெயரை வைத்தே அழைப்பார்கள். சூப்பர் ஸ்டார், தளபதி எனப் பல நடிகர்களை இப்படி தான் அழைப்பார்கள்.
இருப்பினும் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு இதுபோல புனை பெயர்கள் பெரிதாக இல்லை. ஆனால், 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நயன்தாராவை அவரது ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வந்தனர். இதற்கிடையே தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பாக ஓர் பதிவினை வெளியிட்டு “என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது.. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதை அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின் போது என் தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னைத் தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள்,
நீங்கள் பலரும் என்னை “லேடி சூப்பர்ஸ்டார்” என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை “நயன்தாரா” என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது.. ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும்… பட்டங்களும் விருதுகளும் மதிப்பு மிக்கவைதான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலை தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்.
என தெரிவித்ததோடு ரசிகர்களின் அன்பை பாராட்டி மேலும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

