போராட்டத்திற்கு ஆதரவில்லை என இலங்கை நிர்வாக சேவையாளர்கள் அறிவிப்பு

சம்பள முரண்பாடுகளை முன்னிறுத்தி பல்வேறு தொழிற்சங்கக் குழுக்களினால் நாளை (30) அறிவிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதில்லை என இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் தீர்மானித்துள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது. 

தற்போதைய பொருளாதார மற்றும் அபிவிருத்தி சவால்கள் குறித்து கவனம் செலுத்தி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் திருத்தம் தொடர்பில் விஞ்ஞானபூர்வமான ஆய்வொன்றின் பின்னர் தயாரிக்கப்பட்ட ஆக்கபூர்வமான முன்மொழிவொன்று ஏற்கனவே சம்பள ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

ஒட்டுமொத்த அரச சேவையையும் வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் நிர்வகிக்கக்கூடிய வகையில் குறித்த ஆணைக்குழுவினால் சம்பளத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள பின்னணியில், பொதுமக்கள் சேவைகள் முடங்கும் வகையில் செயற்படுவதற்கோ அல்லது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கோ அரச நிர்வாகத்தின் முதன்மைச் சேவையாக இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் செயற்படாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், அரசாங்கத்தினால் சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பரிந்துரைகளின்றி பல்வேறு தரப்பினருக்கும் முறைசாரா வகையில் சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தனது பலத்த அதிருப்தியை வெளியிடுவதாகவும் இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.

manel

Related Posts