உலக இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ கௌரவப் பட்டம், ஜெகனுக்கு வழங்கி கௌரவிப்பு

*‘உலக இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ கௌரவப் பட்டம் ‘இளைய அப்துல் கலாம்’ டாக்டர் ஐ. ஜெகனுக்கு வழங்கி கௌரவிப்பு.

கொழும்பு, நவம்பர் 27, 2026: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினரின் அழைப்பின் பேரில் இந்தியாவிலிருந்து வருகை தந்து மலையகம் மற்றும் கொழும்பில் கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் ஊக்குவிப்பு பிரசங்கங்களை நடாத்திய உலகப் புகழ்பெற்ற ஊக்குவிப்புப் பேச்சாளரும், ‘இளைய அப்துல் கலாம்’ என அழைக்கப்படுபவருமான டாக்டர் ஐ. ஜெகன் அவர்களுக்கு “உலக இளைஞர்களின் எழுச்சி நாயகன்” (Global Icon of Youth Inspiration) எனும் கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இலங்கையின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில், கொழும்பில் உள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அலுவலகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு இன்று (27.11.2026) நடைபெற்றது.

அறிவுசார் பங்களிப்பு, மனிதநேயப் பணிகள், இளைஞர்களை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளைப் பாராட்டி, அவரது சேவைகளையும் பங்களிப்புகளையும் கௌரவிக்கும் வகையில் இக்கௌரவப் பட்டம் வழங்கப்பட்டதுடன், அது தொடர்பான அங்கீகாரக் கடிதமும் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமானது கடந்த 20 ஆண்டுகளாகக் கல்வித் துறையில் ஆற்றி வரும் சேவையின் ஒரு பரிமாணமாக டாக்டர் ஜெகன் அவர்களின் வருகை அமைந்ததாகக் குறிப்பிட்டார். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மலையக இளைஞர், யுவதிகளுக்கு அவர் வழங்கிய ஊக்கமூட்டும் உரைகள் மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கொழும்பு மோதரைப் பகுதியில் தற்கொலை நிலைக்குச் சென்றிருந்த இளைஞர்கள் கூட அவரது பேச்சால் மனம் திரும்பியிருப்பது ஒரு உயிர் காக்கும் பணியாக அமைந்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

மேலும், மலையகச் சமூகத்திற்கும் கல்வி உலகுக்கும் தொடர்ந்து உதவி வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மகேஷ் அண்ணன் உள்ளிட்டோரின் பணிகளையும் அவர் வாழ்த்தினார்.தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த டாக்டர் ஐ. ஜெகன், பிரதி அமைச்சர் பிரதீப் அவர்கள் தனது தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளில் நேரில் கலந்துகொண்டு மாணவர்களின் மாற்றத்தைக் கவனித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

மலையக மக்கள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், ஏழு நாட்களில் சுமார் 10,000 மாணவர்களுக்கு போதைப் பழக்கம், பெற்றோர் அன்பு, காதல், தவறான பாதைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஊட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இமயத்தில் இருந்தாலும் இலங்கை அழைத்தால் மீண்டும் வந்து மாணவர்களுக்குச் சேவையாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு தரப்பினரின் கருத்துக்களிலும் இளைஞர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சிகளின் பிரதான நோக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளதுடன், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஒருங்கிணைப்பும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் அழைப்பை ஏற்று, ஒரு வார காலமாக இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற டாக்டர் ஐ. ஜெகன் அவர்களுக்கு, தாய்நாடு திரும்பும் முன்னதாக பிரதி அமைச்சர் மற்றும் அமைச்சு சார்பில் வாழ்த்துக்களும் கௌரவமும் அளிக்கப்பட்டன.

manel