வடக்கிற்கும் மெட்ரோ!

வடக்கிற்கும் மெட்ரோ!

நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனமயப்படுத்தி, மக்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் வினைத்திறன் மிக்க போக்குவரத்து அனுபவத்தை வழங்கும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மெட்ரோ பேருந்துச் சேவையை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட வீதிப் பரீட்சார்த்த ஓட்டம் நேற்று (10) முன்னெடுக்கப்பட்டது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேனவின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தப் பரீட்சார்த்த ஓட்டத்தின்போது, மெட்ரோ பேருந்துகளுக்கு ஏற்ற வீதிகளை அடையாளம் காணுதல், பேருந்து நிறுத்துமிடங்களைத் தீர்மானித்தல், தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கான தரிப்பிட வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

10 பேருந்துகளுடன் ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ சேவை தற்போது 122 பேருந்துகளாக விரிவடைந்துள்ளது.

2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 10 பேருந்துகளைக் கொண்ட முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை, தற்போது மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், ஏழு வழித்தடங்களில் 122 பேருந்துகள் இயங்கும் சேவையாக விரிவடைந்துள்ளது.

இச்சேவையை கொழும்புக்கு வெளியிலும் விரிவுபடுத்தும் அடுத்தகட்ட நடவடிக்கையாக கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் காலி மாவட்டத்திற்கும் இச்சேவையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, அதிகளவான மக்களைத் தரமான பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்த ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனம் இத்திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது.

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் போக்குவரத்துப் பாதைகளில் நவீன பொதுப் போக்குவரத்தின் புதிய அனுபவத்தை மெட்ரோ திட்டம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

manel