கிரிஷ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை மீண்டும் 20ஆம் திகதி ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு

கிரிஷ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை மீண்டும் 20ஆம் திகதி ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய, இன்று நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலை காவலில் இருந்தால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த வழக்கு விசாரணையின்போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர்களான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையில், கடந்த 03ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைத்து எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடந்த 28ஆம் திகதி அந்த நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக, கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் காரணமாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

manel