மொனராகலையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி!

மொனராகலையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி!

மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட விழிப்புணர்வுப் பேரணி இன்று (04) மொனராகலை நகரை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

“ஆரம்பத்திலேயே கண்டறிதல் உயிர்களைக் காக்கும்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பேரணி, வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பத்திரகேவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

மொனராகலை மகாநாம தேசிய பாடசாலைக்கு அருகில் ஆரம்பமான பேரணி, நகர சபை விளையாட்டு மைதானம் வரை சென்றடைந்தது.

மார்பகப் புற்றுநோய் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவம், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் தாமதமின்றி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்து மக்களைத் தெளிவுபடுத்துதல் ஆகியன இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.

மேலும், பெண்கள் உரிய சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதுடன், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் புற்றுநோய் விசேட வைத்தியர் டிரோமி ரூபசிங்க, வைத்தியசாலையின் விசேட புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் ஊடாக அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை சேவைகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு வைத்தியசாலைத் தரவுகளின்படி, மாதாந்தம் சராசரியாக 25 புதிய நோயாளர்கள் சிகிச்சை நிலையத்தில் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை முழுவதிலும் அதிகளவில் பதிவாகும் புற்றுநோய் வகையாக மார்பகப் புற்றுநோய் காணப்படுகின்ற போதிலும், மொனராகலை மாவட்டத்தில் தைரொய்ட் சுரப்பி தொடர்பான புற்றுநோய்களே அதிகளவில் பதிவாகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி ஜே. எம். கபில ஜயசேகர, மொனராகலை மகாநாம வித்தியாலய அதிபர் பிரபாத் கமிலத், பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், வைத்தியர்கள், விசேட வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

manel