குக் தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கை பெண்: நாடு திரும்ப உதவி கோருகிறார்
இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்குத் தேவையான ‘டிரான்சிட் விசா’ (Transit Visa) பெற முடியாமையின் காரணமாக, இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் நியூசிலாந்துக்கு அருகில் உள்ள குக் தீவில் (Cook Islands) சுமார் மூன்று வருடங்களாகச் சிக்கித் தவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலியந்தலை – போகுந்தர பகுதியைச் சேர்ந்த ருசிரா ரணசிங்க என்ற பெண்ணே இவ்வாறு குக் தீவில் தங்கியுள்ளார்.
எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலாவது தன்னை மீண்டும் இலங்கைக்கு அழைப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த இவர், சில ஆண்டுகள் ஹொங்கொங்கில் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் 3 வருடங்களுக்கு முன்னர் அகதி விசா பெறும் நோக்கில் ஹொங்கொங்கில் இருந்து நியூசிலாந்துக்கு 3 மாத சுற்றுலா விசா மூலம் சென்றுள்ளார்.
அங்கு நிரந்தர வதிவிட உரிமையைப் பெறும் நோக்கில், புலம்பெயர்ந்தோர் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் உதவியை அவர் நாடியுள்ளார்.
அதன்போது, தற்காலிகமாக நியூசிலாந்தை விட்டு வெளியேறி குக் தீவில் இருந்தவாறு மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்குமாறு அந்த நிறுவனம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி குக் தீவுக்குச் சென்ற அவர், அங்கிருந்து பலமுறை நியூசிலாந்து விசாவுக்கு விண்ணப்பித்த போதிலும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் பெற்றிருந்த நியூசிலாந்து சுற்றுலா விசா நிபந்தனைகளின்படி, அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் அங்கு நுழைவதற்கு அனுமதி கிடையாது.
அத்துடன், அகதி அந்தஸ்துக்கான விசா நிபந்தனைகளையும் அவர் மீறியிருந்ததால் இந்தச் சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்குத் தேவையான ‘டிரான்சிட் விசா’வை வழங்க நியூசிலாந்து அரசு மறுத்துள்ளது.
அதேபோன்று அவுஸ்திரேலியாவும் அவருக்கு டிரான்சிட் விசா வழங்க மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

