தேயிலை உற்பத்தியைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்!

தேயிலை உற்பத்தியைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்!

நாட்டின் வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெருக்குவதில் பாரிய பங்களிப்பை வழங்கும் தேயிலை உற்பதியைப் பாதுகாப்பதற்கும், தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்கும் புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் கமநல மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட அல்லது வர்த்தக ரீதியாகப் பதிவு செய்யப்பட்டவைகளே நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு இணங்கப் பேணப்படும் தேயிலை நாற்று மேடைகள் மற்றும் தேயிலை உற்பத்திகளுக்காக மாத்திரம் இந்தக் காப்பீடு வழங்கப்படவுள்ளது.

வெள்ளம், வறட்சி மற்றும் மண்சரிவு போன்ற மனிதனால் கட்டுப்படுத்த முடியாத இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தவிர்க்க முடியாத நோய்கள், கிருமித் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்புகளுக்காகவும் இந்தத் திட்டத்தின் கீழ் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேயிலைச் செடி நாற்று மேடைகளுக்காக ஒரு செடிக்கு வருடாந்தக் காப்பீட்டுத் தொகை 35 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தேயிலைச் செடியை நட்டு, கொழுந்து பறிக்க ஆரம்பிக்கும் வரை அதிகூடிய நான்கு வருட காலப்பகுதிக்கு, ஒரு ஏக்கருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியுமான வசதி இதன் விசேட அம்சமாகும்.

தேயிலைச் செடி நாற்று மேடைகள் மற்றும் தேயிலை உற்பத்திக்கான வருடாந்தக் காப்பீட்டுத் தவணைக் கட்டணம், காப்பீட்டுத் தொகையில் 6 சதவீதமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களைக் கமநல மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது 1918 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

manel

Related Posts