மேய்ச்சல் தரைக் காணிகளைப் பாதுகாக்க ஜனாதிபதியுடன் அவசர பேச்சுவார்த்தைக்கு முயற்சி!
மட்டு.துஷாரா
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைக் காணிகளை மீட்டுப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தின் ஊடாகவும், அரசியல் ரீதியாகவும் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சந்திவெளியில் மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களுக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக ஏற்கனவே நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், மேய்ச்சல் தரைக் காணிகளை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பித்துள்ளோம். குறித்த வழக்கின் அடுத்த தவணை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையில் மிக மோசமான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இன்றும் ஒரு பண்ணையாளர் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார். பண்ணையாளர்களின் மாடுகள் சுட்டுப் படுகொலை செய்யப்படுகின்றன. இதனால், குறித்த வழக்கை முன்னதாக, அதாவது நவம்பர் மாதத்திலேயே மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன் என்றும் அவர் கூறினார்.
நீதிமன்றத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவற்றை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் மாத்திரம் நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கப் போதுமானதாக அமையாது எனச் சுட்டிக்காட்டிய எம்.ஏ.சுமந்திரன், நீதிமன்றத்தின் ஊடாக வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டு தோறும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு சிலர் மீண்டும் அப்பகுதிகளுக்குத் திரும்பும் நிலை காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எதிர்பார்த்த தீர்வு கிடைக்காத நிலையிலேயே நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்ததாகவும் மகாவலி அதிகாரசபை நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அந்த வாக்குறுதியைச் சுட்டிக்காட்டி மீண்டும் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் தற்காலிகத் தீர்வுகளைப் பெறுவதுடன், எதிர்காலத்தில் மீண்டும் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாத வகையில் காணிகளைப் பாதுகாப்பதற்கான நிரந்தர ஏற்பாடுகளை உருவாக்குவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக ஜனாதிபதியைச் சந்தித்து அவசரமாகக் கலந்துரையாடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் ஊடாக ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி சந்திப்புக்கான நேரத்தை வழங்கினால் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடி நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், மேய்ச்சல் தரைக் காணிகள் உரிய நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் நீதிமன்ற நடவடிக்கைகளுடன் அரசியல் ரீதியான முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படாத வகையில் நிரந்தரமான சட்டரீதியான தீர்வொன்றை உருவாக்குவதே தமது நோக்கம் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

