ஹொரணையில் காணாமல் போன 16 வயது மாணவன் மொரட்டுவ கடற்கரையில் சடலமாக மீட்பு!
- கல்விக் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற மாணவன் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார்
- மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு
ஹொரணை நகரில் நடைபெற்ற கல்விக் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற பின்னர் காணாமல் போன, அப்பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற 16 வயது மாணவன் ஒருவரின் சடலம், மொரட்டுவ கடற்கரையில் நேற்று (26) மீட்கப்பட்டுள்ளது.
119 அவசர தொலைபேசி இலக்கத்துக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, மொரட்டுவை மதங்கஹவத்த கடற்கரையில் நேற்று அதிகாலை சுமார் 5.58 மணியளவில் சடலம் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை பொலிஸாரால் அடையாளம் தெரியாத சடலமாகக் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்தவரின் தந்தை சடலத்தை அடையாளம் கண்டுள்ளார்.
மில்லேனிய, மதுகஹவத்த, தம்பர பகுதியைச் சேர்ந்த டொன் மியுரு நிம்சர வீரக்கோன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகி வந்த குறித்த மாணவன், நேற்று முன்தினம் (25) வீட்டிலிருந்து சென்ற பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரது பெற்றோர் ஹொரணை தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
மாணவனின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (27) களுபோவில வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

