பதுளை மாவட்டத்தின் 100 ஆன்மீக தலங்களின் அபிவிருத்திக்காக ரூ. 50 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
- அமைச்சர் சமந்த வித்யாரத்ன, ஊவா ஆளுநர் கபில ஜயசேகர பங்கேற்பு
ஊவா மாகாணத்திலுள்ள ஆன்மீகத் தலங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ‘சசுனோதய’ திட்டத்தின் கீழ் ரூ. 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ள தேசிய திட்டத்தின், பதுளை மாவட்டத்திற்கான கட்டம் நேற்று (23) பண்டாரவளை நகர சபை மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதன்போது பதுளை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 100 விகாரைகள் மற்றும் ஆன்மீகத் தலங்களின் அபிவிருத்திக்காக ரூ.50 மில்லியன் நிதி உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
தோட்ட சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
மதங்களின் நிலைபேறான தன்மையை உறுதி செய்வதற்காக அரசின் பங்களிப்புடன் செயற்படுத்தப்படும் இத்திட்டம், எதிர்வரும் வருடங்களில் ஊவா மாகாணம் முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, பண்டாரவளை மாநகரசபை மேயர் சாகரதீர விஸ்வ விக்ரம உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், ஊவா மாகாணச் செயலாளர் அனுஷா கோகுல, பதுளை மேலதிக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் விகாரைகளின் பரிபாலன சபை பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

