நீதிமன்றில் ஆஜராகத் தவறிய டயானா கமகேவுக்கு எதிராகக் திறந்த பிடியாணை!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (22) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
போலியான பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே ஒரு சந்தர்ப்பத்திலும் வழக்கு விசாரணைக்கான திகதியை மறந்துவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியிருந்த நிலையில், அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட உத்தரவிட்டிருந்தார்.
டயானா கமகேவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் சாட்சிய விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
ஆவணங்களைச் சரிசெய்த பின்னர், இருதரப்பு சமர்ப்பணங்களுக்கான திகதியை நிர்ணயிப்பதற்காகவே நேற்று (22) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கைப் பிரஜை அல்ல என்பதை அறிந்திருந்தும், தனது பெயரைச் சட்டபூர்வமாக ‘டயானா கமகே’ என மாற்றிக்கொள்ளாமல், அந்தப் பெயரில் தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்காக ஆள் பதிவுத் திணைக்கள அதிகாரிகளை ஏமாற்றும் நோக்கில் செயற்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்காக 4658 இலக்கத்தைக் கொண்ட போலியான பிறப்புப் பதிவேட்டை பாணந்துறை அல்லது கொழும்பில் தயாரித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2004 ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதியில் போலியான பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து, போலியான தேசிய அடையாள அட்டையைத் தயாரித்து, வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டதாகவும் டயானா சமன்மலி, டயானா நடாஷா கெகுணதுர அல்லது டயானா கமகே என அழைக்கப்படும் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் தண்டனைச் சட்டக்கோவையின் 32, 102, 457 மற்றும் 459 ஆகிய பிரிவுகளின் கீழ் மூன்று குற்றப்பத்திரிகைக் குற்றச்சாட்டுகள் 2024 ஜூன் 6ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டன.
அரச தரப்பு சார்பில் அரச சட்டத்தரணி அகிலா தல்பதாது ஆஜராகியிருந்தார்.

