உயிர்த்த ஞாயிறு விசாரணைகள்: கருணா அம்மானின் போலி கடவுச்சீட்டு விவகாரத்தில் சுரேஷ் சலே பெயர் அடிபடுகிறது!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மற்றும் அன்சாப் ஆகியோரே, விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் வெளிநாடு செல்வதற்காக போலியான இராஜதந்திர கடவுச்சீட்டைத் தயாரித்துக் கொடுத்ததாக நேற்று (21) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்.ரீ.ரீ அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியான கருணா அம்மான், குறித்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 2007ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்றபோது அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கோகில குணவர்தன என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே அவர் இங்கிலாந்துக்குள் பிரவேசித்திருந்தார்.
எனினும், சுரேஷ் சலே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருவதுடன், கடவுச்சீட்டைத் தயாரித்துக் கொடுக்கவில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளார்.
சுரேஷ் சலேவைச் சந்தித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் கருணா அம்மானை இங்கிலாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் அங்கு சிறையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
குறித்த இராஜதந்திர கடவுச்சீடு போலியானது என்பதுடன், அது சட்டபூர்வமான கடவுச்சீடு அல்ல என்பதும் அப்போது கண்டறியப்பட்டது” எனத் தெரிவித்தார்.
மேலும், கருணா அம்மான் இந்தக் கடவுச்சீட்டை சுரேஷ் சலே மற்றும் தற்போது வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள அன்சாப் ஆகியோரே பெற்றுக்கொடுத்ததாகக் கூறியுள்ளதாகவும், அவர்கள் அதனை மறுப்பதாகவும் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அவசியம் எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“கோகில துஷ்மந்த குணவர்தன என்ற பெயரில் அரச சேவையில் எவரும் இல்லை. அந்தப் பெயரில் ஒரு நபரைக்கூட நேரடியாகக் கண்டறிய முடியவில்லை. இவ்வாறானதொரு அடையாளம் எவ்வாறு உருவாக்கப்பட்டது?
தற்போதைய தகவல்களின் அடிப்படையில், சுரேஷ் சலே கடவுச்சீட்டு தொடர்பான விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவராகக் குறிப்பிடப்படுகிறார். அவரிடம்கூட இரண்டு அல்லது மூன்று வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் இருந்துள்ளதாகத் தெரியவருகிறது” எனவும் திலீப பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

