6 ஆண்டுகளாகக் கடிதங்களை விநியோகிக்காமல் படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்த அஞ்சல் ஊழியர் கைது!
ஹல்துமுல்லை பகுதியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக விநியோகிக்கப்படாத 2,078 கடிதங்களைத் தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 42 வயதுடைய அஞ்சல் ஊழியர் ஒருவர் ◌ாவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த நபரின் வீட்டை நேற்று (20) சோதனையிட்டபோது இந்தக் கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 2,065 சாதாரண கடிதங்களும் 13 பதிவுத் தபால்களும் அடங்குகின்றன.
அரச நிறுவனங்களின் முக்கிய ஆவணங்கள், நீதிமன்ற அறிவித்தல்கள் மற்றும் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களும் அவற்றில் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சொரகுணை, ஹல்துமுல்லை மற்றும் ஹரங்கஹாவ பகுதிகளில் விநியோகிப்பதற்காக ஒப்படைக்கப்பட்ட கடிதங்களை உரிய முறையில் விநியோகிக்கத் தவறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (21) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்லை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

