ருமேஷ் தரங்கவுக்கு வழங்கப்பட வேண்டிய 5 கோடி ரூபாய் பணப்பரிசு எங்கே?
தடகள வீரர் ருமேஷ் தரங்கவுக்கு வழங்கப்பட வேண்டிய 5 கோடி ரூபாய் பணப்பரிசு இதுவரை வழங்கப்படாமைக்கான காரணம் என்னவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரச சுற்றறிக்கைக்கு அமைய குறித்த பரிசுத்தொகையை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், இதுவரை அது வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் முதலிடங்களைப் பெற்ற ருமேஷ் தரங்கவுக்கு, விதிமுறைகளுக்கு அமைய வழங்கப்பட வேண்டிய தொகையை வழங்குவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என விளையாட்டுத்துறை அமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், விசேட சுற்றறிக்கையொன்றின் ஊடாக அவருக்கு வழங்கப்பட வேண்டிய பரிசுத்தொகையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அவற்றின் உண்மைத்தன்மை தனக்குத் தெரியாது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனவே, வீரரை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய 5 கோடி ரூபாய் முழுத் தொகையையும் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

