நான் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழன்

“நான் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழன்!” –
உலக அரங்கில் தனது அடையாளத்தைப் பதிவு செய்த ஜீவன் தொண்டமான்!
உலகப் பொருளாதார மன்றத்தின் வரலாற்றில் இலங்கையிலிருந்து தெரிவான 10 பேரில் ஒருவர்!மலையகத்திற்கு சர்வதேச அரங்கில் கௌரவிப்பு!
உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) இளம் உலகத் தலைவர்கள் (Young Global Leaders) பட்டமளிப்பு நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், “நான் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழன்” என தனது உரையில் குறிப்பிட்டு, சர்வதேச அரங்கில் தனது சமூக அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகத் தலைவர்கள் திட்டத்தின் வரலாற்றில், இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 10 பேரில் ஒருவராக ஜீவன் தொண்டமான் இடம்பெற்றுள்ளார்.மேலும், உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகத் தலைவர்கள் திட்டத்தின் (Young Global Leaders Programme) 2024ஆம் ஆண்டுக்கான கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக, ஜீவன் தொண்டமான் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகத் தலைவர்கள் மன்றப் பணிப்பாளர் இடா ஜெங் கிறிஸ்டென்சன் (Ida Jeng Christensen) அவர்களால் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது. உலகளவில் அரசியல், பொருளாதாரம், தொழில்துறை, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளம் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சர்வதேச தலைமைத்துவ வலையமைப்பில் இணைக்கும் இத்திட்டத்திற்கு, கடந்த 2024ஆம் ஆண்டு ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.இலங்கையிலிருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆளுமைகளே இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நிலையில், மலையக மக்களின் பிரதிநிதியான ஜீவன் தொண்டமானும் அவர்களில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தேசிய எல்லைகளைக் கடந்து சர்வதேச அரங்கிலும் இடம்பிடித்துள்ளமை, மலையகத்தின் இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரில் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இம்மாநாடு நடைபெற்றது.
