கொல்கத்தாவில் துர்கா பூஜையில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரபல துர்கா பூஜை பந்தல் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொல்கத்தாவின் சாரா பார்க் துர்கா பூஜை பந்தலின் வெளியேறும் வாயிலில் நேற்று மாலை 7:40 அளவில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துர்கா பூஜையின் சப்தமி தினத்தன்று பெய்த பலத்த மழையின் காரணமாக, பந்தலைப் பார்வையிட வந்த பெருமளவான மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முற்பட்டபோதே இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் விரைந்து செயற்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தைத் தொடர்ந்து அந்தப் பூஜை பந்தல் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பூஜை ஏற்பாட்டுக் குழுவின் அமைப்பாளர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட 12 பேர் விசாரணைகளுக்காக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிதியுதவியும், Group D அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அத்துடன், காயமடைந்தவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்பதுடன், அவர்களுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

