ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடியில் சிக்கிய இரு கப்பல்களில் தீப்பரவல்

மத்திய கிழக்கில் போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளுக்கு  இலக்கானதாக ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைத் தன்வசம் கொண்டுள்ள ஈரான், உலக எண்ணெய் நுகர்வில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் இந்த வழியை முடக்கியுள்ளது.

அனைத்துக் கப்பல்களும் தனது அனுமதியைப் பெற்ற பின்னரே பயணிக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.

இந்தநிலையில், விதிகளுக்கு முரணாகவும், அனுமதியின்றியும் இரண்டு மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயைச் சுமந்துகொண்டு ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற கப்பல் ஒன்று கடல் கண்ணிவெடியில் மோதி வெடித்துச் சிதறியதுடன் தீப்பற்றி எரிந்துள்ளது.

அமெரிக்காவின் ஆதரவுடன் தனது அனைத்து கண்காணிப்பு அமைப்புகளையும் முடக்கிவிட்டு இந்தக் கப்பல் சட்டவிரோதமாகச் செல்ல முயன்றதாகக் காவல்படை குற்றம் சாட்டியுள்ளது.

இதேபோல், அதே பகுதியில் மேலும் சுமார் இரண்டு மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயுடன் சென்ற இரண்டாவது  கப்பலும் கடல் கண்ணிவெடி தாக்கியதில் தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. 

manel