ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இரு பெண்கள் 6 பேர் கைது

பொல்கஸ்ஸோவிட்ட, ஹல்பிட்ட பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பொதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 6 சந்தேகநபர்கள் சுமார் 56 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெஸ்பேவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.பி. கலன்சூரியவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 112 கிராம் ஹெரோயின், மின்சாரத் தராசு ஒன்று மற்றும் போதைப்பொருட்களைப் பொதி செய்யப் பயன்படுத்தப்படும் செவ்விந்தியர் (Red Indian) சின்னம் பொறிக்கப்பட்ட சிறிய காகிதத் தொகுதி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் தம்பதியினரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்கூட்டத்தினரிடையே, சில மாதங்களுக்கு முன்னர் பொரலஸ்கமுவ பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து பெண்ணொருவருக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்திய சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபரும் உள்ளடங்குகிறார்.
இது தவிர, மற்றொரு சந்தேகநபருக்கு எதிராகத் திருட்டு, கொள்ளை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஏனைய சந்தேகநபர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திட்டமிடப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘போதியவத்தே அவிஷ்க’ என்பவருக்குச் சொந்தமானதே இந்த போதைப்பொருள் தொகுதி என தெரியவந்துள்ளது.
குறித்த பிரதான கடத்தல்காரர் வழங்கும் தொலைபேசி அறிவுறுத்தல்களுக்கு அமைய இவர்கள் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்களை விநியோகிக்கும் வலையமைப்பைப் பராமரித்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களைக் கெஸ்பேவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தித் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, கெஸ்பேவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

