நுவரெலியா நீர்வழங்கல் பிரிவு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் இணைந்து அபிவிருத்தி

மக்கள் மற்றும் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நுவரெலியா நீர்வழங்கல் பிரிவு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், நுவரெலியா மாநகர சபையின் நீர்வழங்கல் பிரிவை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையுடன் இணைந்து அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுப்பது தொடர்பான யோசனை இன்று (08) நடைபெற்ற மாநகர சபை மாதாந்தக் கூட்டத்தில் மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
நுவரெலியா மாநகர சபை மேயர் உபாலி வனிகசேகர தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், யோசனைக்கு ஆதரவாக 14 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், 11 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
ஆதரவாக அளிக்கப்பட்ட 14 வாக்குகளில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் அடங்கினர்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, சுயேச்சைக் குழு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 உறுப்பினர்கள் யோசனைக்கு எதிராக வாக்களித்தனர்.
நுவரெலியா மாநகர சபையின் நீர்வழங்கல் பிரிவை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கீழ் கொண்டுவருவதற்கு எதிராக கடந்த சில சபைக் கூட்டங்களிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டிகளை அணிந்து சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், நேற்று (07) நுவரெலியா நகரில் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தினர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் சுசந்த பலிஹவடன, ‘ஒப்படைத்தல்’ மற்றும் ‘கையளித்தல்’ என்ற சொற்களால் வேறுபாடு காட்டப்பட்டாலும், நடைமுறையில் இது ஆரம்பம் முதலே கையளிக்கும் செயற்பாடாகவே தாம் கருதுவதாக தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகவும், எதிர்காலத்தில் மாநகர சபை ஊழியர்கள் அல்லது வேறு தரப்பினர் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டால், அதற்கும் தாம் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த யோசனைக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி மேயர் சிவன்ஜோதி யோகராஜா உள்ளிட்ட இரு உறுப்பினர்கள் இம்முறை யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி மேயர் சிவன்ஜோதி யோகராஜா, நீர்வழங்கல் பிரிவை கையளிப்பது தொடர்பில் தாம் முன்வைத்த சில யோசனைகளை உள்ளடக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதன் காரணமாக இம்முறை யோசனைக்கு ஆதரவளித்ததாக தெரிவித்தார்.
அத்துடன், தமது கட்சியிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையும் இந்த தீர்மானத்தை மேற்கொள்வதில் தாக்கம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட யோசனையானது நீர்வழங்கல் பிரிவை முழுமையாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு கையளிக்கும் நடவடிக்கை அல்ல என நுவரெலியா மாநகர சபை மேயர் உபாலி வனிகசேகர தெரிவித்தார்.
நீர்வழங்கல் பிரிவின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையுடன் இணைந்து முன்னெடுப்பது தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நுவரெலியா நகரில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண 25,100 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேயர் உபாலி வனிகசேகர தெரிவித்தார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலான நடைமுறையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனடிப்படையில், கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நுவரெலியா மாநகர சபையின் நீர்வழங்கல் பிரிவை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையுடன் இணைந்து அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுப்பது தொடர்பான யோசனை 14க்கு 11 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

