இலங்கையிலுள்ள ரோஹிங்கியா அகதிகளை சந்திக்க அனுமதிக்குமாறு UNHRC இல் கோரிக்கை

இலங்கையிலுள்ள ரோஹிங்கியா அகதிகளை சந்திக்க அனுமதிக்குமாறு UNHRC இல் கோரிக்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி, இலங்கையில் வசிக்கும் ரோஹிங்கியா பிரதிநிதியான மொஹமட் அன்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனீவாவில் கடந்த செப்டெம்பர் 7ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 63ஆவது அமர்வில் உரையாற்றியபோதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

தடுப்புக்காவலும் மனித உரிமைச் சூழலும்
2024 டிசெம்பர் மாதம் 57 சிறுவர்கள் உட்பட 116 ரோஹிங்கியா மக்கள் ஆபத்தான கடல் பயணத்தின் மூலம் இலங்கைக்கு வந்தடைந்ததாகவும், இதில் இரு படகுகள் மூழ்கியதில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்த மொஹமட் அன்வர், அவர்கள் அனைவரும் அரசியல் பாதுகாப்பை நாடுபவர்கள் எனச் சுட்டிக்காட்டினார்.
எனினும், அவர்கள் 20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.

எனவே, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிப்பதுடன்:

  • அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு (UNHCR), சட்டத்தரணிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்.
  • அரசியல் பாதுகாப்பு கோருபவர்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ எனக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பாணந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ரோஹிங்கியாக்களின் வாழ்வாதாரம், குடியிருப்பு, உணவு, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.
  • அகதிகளுக்கு ஆதரவளிக்கும் இலங்கையின் மனித உரிமைப் பாதுகாப்பாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
    குடியுரிமை கோரிக்கை
    மியன்மாரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து இனப்படுகொலை இடம்பெற்று வருவதாக ஐ.நா விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நாடற்றவர்களாக உள்ள ரோஹிங்கியாக்கள் உட்பட வேறு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடம் பெற முடியாத அகதிகளுக்கு குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட அனுமதி வழங்குவது குறித்து இலங்கை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
    மேலும், 2024 டிசெம்பரில் வட கடல் பகுதியில் சிக்கித் தவித்த தம்மை மீட்ட இலங்கை கடற்படையினருக்கும், முதன்முதலில் உதவிய வன்னிப் பகுதி மீனவர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்

  • சர்வதேச சட்டக் கடப்பாடுகள்
    முன்னதாக, முல்லைத்தீவு முகாமில் உள்ள ரோஹிங்கியாக்களை மீண்டும் மியன்மாருக்கே திருப்பி அனுப்புவதாக அளிக்கப்பட்ட வாக்குமூலங்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. ரோஹிங்கியாக்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், அகதிகள் தொடர்பான 1951ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறும் செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

manel

Related Posts