இறந்த மூதாட்டியின் பெயரில் அஸ்வெசும நிதி மோசடி!
இறந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள மூதாட்டி ஒருவரின் அஸ்வெசும நலன்புரி கொடுப்பணவு, இளைஞர் ஒருவரின் வங்கிச் கணக்கில் முறைகேடாக வைப்பிலிடப்பட்டு வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொகவந்தலாவ கெம்பியன் லொய்னோன் ஆல்டி தோட்டத்தைச் சேர்ந்த அருணாசலம் நல்லதங்கா என்ற மூதாட்டி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். எனினும், இவரது பெயரிலான அஸ்வெசும நிதி, தெரேசியா தோட்டப் பகுதியைச் சேர்ந்த ராஜரட்ணம் ரஜனிகாந்த் என்பவரின் வங்கிச் கணக்கிற்குத் தொடர்ந்து செலுத்தப்பட்டு வந்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த மூதாட்டியின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை (802570865) பரிசீலனைக்கு உட்படுத்திய போதே இந்த மோசடி கடந்த வியாழக்கிழமை (03.09.2026) வெளிச்சத்திற்கு வந்தது.
250 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு
நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த பரந்த அளவிலான அஸ்வெசும ஊழல் தொடர்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், சுமார் 250 மில்லியன் ரூபாய் பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 அரச உத்தியோகத்தர்களுக்கு இதில் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மற்றும் உரிமையுள்ள பொதுமக்கள் நியாயம் கோரி ஒவ்வொரு திங்கட்கிழமையும் நோர்வூட் பிரதேச செயலகத்தில் திரண்டு வரும் சூழல் நிலவுகிறது. எனவே, இந்த ஊழலில் தொடர்புடைய அனைத்து அரச அதிகாரிகளுக்கும் எதிராக உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

