KDU புதிய துணைவேந்தராக இந்திக விக்ரமசிங்க பொறுப்பேற்பு!
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் (KDU) புதிய துணைவேந்தராக ஏர் வைஸ் மார்ஷல் இந்திக விக்ரமசிங்க நேற்று (01) காலை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் தனது முதலாவது உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
விமானப்படையின் திறமையான வானூர்திப் பொறியியலாளரான ஏர் வைஸ் மார்ஷல் இந்திக விக்ரமசிங்க, இலங்கை விமானப்படையில் பல முக்கிய பொறியியல் பதவிகளை வகித்துள்ளார். குறிப்பாக, பொது பொறியியல் பணிப்பாளர் நாயகம் மற்றும் வானூர்திப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ பொறுப்பேற்பைத் தொடர்ந்து காவலர் அணிவகுப்பு, KDU கொடிகளுடன் கூடிய சிறப்பு அணிவகுப்பு மற்றும் நினைவாக மரக்கன்று நடும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் KDU-வின் துணைவேந்தர்கள், வளாகங்களின் தலைவர்கள், பீடாதிபதிகள், நிலையப் பணிப்பாளர்கள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் அதிகாரி பயிலுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் KDU-வின் அனைத்து பீடங்களின் பீடாதிபதிகளைச் சந்தித்த புதிய துணைவேந்தர், தனது பதவிக்காலத்தில் பல்கலைக்கழகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான தனது தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார்.
இதன்போது, தரமான கல்வியை வழங்குவதன் மூலம் பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துதல், கல்விசார் சிறப்பை வலுப்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளை அதிகரித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த இலக்குகளை அடைவதற்காக அனைத்து பணியாளர்களும் முழுமையான ஒத்துழைப்பையும் செயற்பாட்டு பங்களிப்பையும் வழங்குமாறு துணைவேந்தர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தன்னை KDU துணைவேந்தராக நியமித்த ஜனாதிபதிக்கும், இப்பதவிக்காக தன்னைப் பரிந்துரைத்த விமானப்படைத் தளபதிக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் கொத்தலாவல பாதுகாப்பு அகாடமியில் (KDA) மாணவராக இருந்த காலத்தில் தமக்கு வழிகாட்டி, தொழில்முறை வளர்ச்சிக்கு பங்களித்த கட்டளைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், விரிவுரையாளர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
KDA-வில் பெற்ற அனுபவமும் வழிகாட்டுதலும், தற்போது KDU துணைவேந்தராக உயர்ந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு தன்னைத் தயார்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் ஏர் வைஸ் மார்ஷல் இந்திக விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

