டெவோன் ஆற்றில் கழிவுகளைக் கொட்டிய நபர்கள் கைது!
தலவாக்கலை, டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் வழங்கும் டெவோன் ஆற்றில் தொடர்ச்சியாக இறைச்சிக் கழிவுகள் மற்றும் கழிவு எலும்புகளை கொட்டி வந்த இரண்டு இறைச்சிக் கடை ஊழியர்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்களால் (PHI) கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் – கொட்டகலை நகரில் இயங்கி வரும் இறைச்சிக் கடை ஒன்றில் சேரும் கழிவுகளை முச்சக்கரவண்டி மூலம் எடுத்துவந்து, ஆற்றின் நீர்நிலைகளில் கொட்டிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி மற்றும் சுகாதாரப் பாதிப்பு:
கொட்டகலை ரொசிட்டா பகுதியில் அமைந்துள்ள 60 அடி இரும்புப் பாலத்திற்கு அருகிலுள்ள ஓடைப் பகுதி வழியாக கிறிஸ்டஸ் பார்ம் (Christas Farm) உட்பட பல தோட்டப் பாதைகள் அமைந்துள்ளன. தினசரி ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இந்தப் பாதையின் அருகே சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்பட்டு வந்ததால், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியதுடன் பெரும் சுகாதாரச் சீர்கேடும் நிலவி வந்தது.
இதனையடுத்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி கே. சுதர்சனின் வழிகாட்டலின் கீழ், நிர்வாகப் பொது சுகாதாரப் பரிசோதகர் தேவன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு சந்தேக நபர்களை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
நீதிமன்ற நடவடிக்கை:
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை தலா 200,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கின் மேலதிக விசாரணைகளை வரும் அக்டோபர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். மேலும், கழிவுகளை ஏற்றிவரப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
PHI அதிகாரிகளின் கடும் எச்சரிக்கை:
கொட்டகலை நகரில் செயல்படும் சில கோழி இறைச்சிக் கடைகளின் கழிவுகளும் இதேபோன்று டெவோன் ஓடையில் கொட்டப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த சுகாதாரப் பரிசோதகர்கள், சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அனைத்து இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கும் எதிராக எந்தவித தயவுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

