நுவரெலியா மாநகர சபை அமர்வில் விசேட கலந்துரையாடல்
நுவரெலியா மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று (09) காலை 10.30 மணியளவில் மாநகர சபை மண்டபத்தில், மேயர் உபாலி வணிகசேகர தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, நுவரெலியா மாநகர சபையின் பிரதி மேயர் சிவன் ஜோதி யோகராஜா பல்வேறு அபிவிருத்தி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை முன்வைத்தார்.
நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய அவர், அனுமதியின்றி அல்லது சட்ட விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் கட்டிட நிர்மாண நடவடிக்கைகள் மாநகர சபையின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், நுவரெலியா நகரின் அழகையும் சுற்றுச்சூழல் பெறுமதியையும் அதிகரிக்கும் மரங்களை அனுமதியின்றி வெட்டும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பிரதி மேயர் குறிப்பிட்டார். மரங்கள் நகரின் முக்கிய சொத்துக்களில் ஒன்றாக காணப்படுவதால், அவற்றை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் அவசியம் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தமது வீடுகளில் மரண சடங்குகளை நடத்துவதற்கும் போதிய இடவசதி இல்லாத நிலை காணப்படுவதால், பொதுமக்களின் தேவைக்காக தனியான மலர் சாலை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்தார்.
இதற்காக மாநகர சபை நிதி ஒதுக்கீடு செய்து, உரிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பிரதி மேயர் தெரிவித்தார்.
இதேவேளை, பல்வேறு மக்கள் நலன் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளும் இன்றைய மாநகர சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது…

