திருகோணமலையில் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கள ஆய்வு

அத்துமீறல்களை அகற்றவும், இராணுவக் கட்டுப்பாட்டு காணிகளை விடுவிக்கவும் நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான கௌரவ அருன் ஹேமச்சந்திரா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும், மாவட்டச் செயலாளரின் வழிகாட்டுதலுக்கு இணங்கவும் குச்சவெளி பிரதேசத்தில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் விசேட கள ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குச்சவெளி பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விரிவான கள ஆய்வில், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்களக் காணி போதனாசிரியர்கள் உள்ளிட்ட பல கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்

இவ் ஆய்வுப் பயணத்தின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன

காணி அனுமதிப் பத்திரம் வழங்குதல்: பூஜா பூமிக்கு அப்பாற்பட்ட பொன்மலைக் குடா பகுதியில் அமைந்துள்ள காணிகளுக்கு, சட்டபூர்வமான அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அரசாங்கக் காணிகள் மீட்பு

களப்பு ஒதுக்குகள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளை அத்துமீறிப் பிடித்துள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களை அங்கிருந்து அகற்றி, அக்காணிகளை மீண்டும் அரசாங்கத்தின் வசம் மீளப் பெறுவது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன

பொதுமக்கள் காணிகளை விடுவித்தல்:

கடற்படையினர் மற்றும் இராணுவத்தினரால் கோரப்பட்டுள்ள காணிகளில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் ஏதும் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன் அவ்வாறான காணிகளை இனங்கண்டு உரிய மக்களிடம் மீண்டும் விடுவிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது

நீண்டகால காணிப் பிணக்குகளுக்கு தீர்வு:

குள ஒதுக்குப்பகுதிகளில் சட்டவிரோதமாகப் பயிர்செய்கை செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்தும், பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இழுபறியிலுள்ள காணிப் பிணக்குகளுக்கு உரிய தீர்வை வழங்குவது குறித்தும் இதன்போது நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

இவ் விசேட கள ஆய்வின் மூலம் குச்சவெளி பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

manel