திருகோணமலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்குவதில் இழுத்தடிப்பு!

திருகோணமலையில்  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்குவதில் இழுத்தடிப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்குவதில் அரசாங்கம் வேண்டுமென்று இழுத்தடிப்புகள் செய்து வருவதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த திருகோணமலை மாவட்ட மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேறிய போதிலும் வீடுகள் அழிவடைந்துள்ளமையால் தற்காலிக இருப்பிடங்களில் வசித்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களது தகைமைகள் பரீட்சிக்கப்பட்டு அவர்களது பெயர்கள் உள்வாங்கப்பட்ட போதிலும் வீட்டுக்கான கொடுப்பனவுகள் வழங்குவதில் இழுத்தடிப்புகள் காணப்படுகின்றன.

சுற்றறிக்கைகளுக்கப்பால் மேலதிக ஆவனங்கள் கோரப்பட்டு அவை சமர்ப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் பல வீடுகளுக்கான கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்தவர்கள் தாம் இடம்பெயர்ந்தவதை நிருபிக்கின்றனர். கிராம உத்தியோகத்தர்கள் இடம்பெயர்ந்ததை உறுதிப்படுத்துகின்றனர். வீடு பாதிக்கப்பட்டதை நேரில் அவதானித்து சிபார்சுக்குழு சிபார்சு செய்துள்ளது. வீட்டுப் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான வழிகாட்டலின்படி உரிய தகைமைகள் உள்ளன. புனர்வாழ்வு அட்டைகள் உள்ளன.

இப்போது இம்மக்களிடம் இதற்கு மேலதிகமாக பொலிஸ் அறிக்கை கோரப்படுகின்றது. சுற்றறிக்கையில் குறிப்பிடப்படாத விடயங்களை ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டபோது மேல்மட்ட உத்தரவு என்று கூறப்படுகின்றதாம்.

இதன்படி பொலிஸ் அறிக்கையை தொலைத்த பொதுமக்கள் பொலிஸ் நிலையம் சென்று அதன் பிரதியைக் கோரினால் பழைய ஆவணங்கள் எதுவுமில்லை என்று பொலிஸ் நிலையங்களில் தெரிவிக்கப்படுகின்றதாம்.

இது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரான பிரதியமைச்சரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்த போதிலும் எதுவும் நடக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, அரசாங்கம் வீடு வழங்குவது போல் காட்டி அதன வழங்காமல் இருப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. இது ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிப்பது போன்ற செயலாகும்.

அரசாங்கம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இது போன்ற தந்திரங்களைக் கையாண்டு நிதியை மீதப்படுத்துகின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது என்று குறிப்பிட்டார்.

manel