சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக தௌபீக் பதவியுயர்வு!

சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக தௌபீக் பதவியுயர்வு!

அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த ஏ.எல்.தௌபீக், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் இன்று (01) திங்கட்கிழமை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து, இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது ஆளுநரின் செயலாளர் பி.வாகீசன், கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.குணநாதன் மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தரம் I இல் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில், தகுதியானவர்களிடம் இருந்து மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கமைய நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் புள்ளி விபரங்களின் அடிப்படையில், மாகாண மட்டத்தில் இரண்டு பேர் மாத்திரமே இந்த உயர்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

அதற்கமைவாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எல்.தௌபீக் என்பவரும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஆர்.ஜி.நிமல்சிறி பண்டார ஆகியோர் தெரிவாகினர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டதாரியான தௌபீக், அரச சேவையில் நிகழ்ச்சித்திட்ட உதவியாளராக, ஆசிரியராக மற்றும் அதிபராக 8 வருடங்கள் சேவையாற்றி, பின்னர் போட்டிப் பரீட்சை மூலம் கலாசார உத்தியோகத்தராகத் தெரிவுசெய்யப்பட்டு, 2000ஆம் ஆண்டு முதல் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றினார்.

2009ஆம் ஆண்டு முதல் அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தராக நியமனம் பெற்று, மாவட்ட செயலகம் மற்றும் மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயங்களில் கடந்த 17 வருடங்களாக மாவட்ட மட்ட கலாசார வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பதவியுயர்வு நியமனமானது 2023.01.01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

manel