முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீடு இன்று 3வது நாளாக விசாரணை

முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீடு இன்று 3வது நாளாக விசாரணை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (11) மூன்றாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஷிரான் குணரத்ன, அர்ஜுன ஒபேசேகர, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தமது விடயங்களைச் சமர்ப்பிக்கத் தொடங்கினர். பிரதிவாதிகளான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்கள் நேற்றுடன் நிறைவடைந்திருந்தன.

2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிப்பதற்காக, சதொச நிறுவனம் ஊடாக 14,000  கேரம் பலகைகள் மற்றும் 11,000 தாம் பலகைகளை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 6 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம், பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாகக் கண்டு மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், நளின் பெர்னாண்டோவுக்கு 30 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்தத் தண்டனைகளிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்கள் இருவராலும் இந்த மேன்முறையீடு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

manel