நீதிமன்றத்திலேயே துப்பாக்கியைத் திருடிய கைதி!
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (29) கைத் துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்கிஸ்ஸை நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நீதிமன்ற களஞ்சியசாலையை சுத்தம் செய்வதற்காக மூவர் கொண்ட சிறைக் கைதி குழுவொன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
அவர்களுள் ஒரு கைதி, சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது நீதிமன்ற வழக்குத் தடயப் பொருட்களுள் இருந்த தோட்டாக்கள் இல்லாத துப்பாக்கியொன்றை எடுத்துக்கொண்டு சிறைச்சாலைப் பேருந்தில் ஏறியுள்ளார்.
இந்நிலையில் பேருந்து சிறைக்குத் திரும்புவதற்காக நீதிமன்ற வளாகத்தை விட்டுப் புறப்பட்டுள்ளது.
அப்போது வழக்கு நடவடிக்கைகளுக்காக கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவரின் பின் இருக்கையில் துப்பாக்கியை திருடிய கைதி அமர்ந்துள்ளார்.
அந்தச் சமயத்தில் கைதியின் கையிலிருந்த பொதியைக் கண்ட அதிகாரிகள் அதனைப் பரிசோதித்தபோது துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

