தீச்சம்பவத்துக்குப் பின் வழமைக்குத் திரும்பிய டாக்கா விமான நிலையம்

தீச்சம்பவத்துக்குப் பின் வழமைக்குத் திரும்பிய டாக்கா விமான நிலையம்

பங்ளாதே‌‌‌ஷ் தலைநகர் டாக்காவில் உள்ள விமான நிலையத்தில் கடுமையாக மூண்ட தீச் சம்பவத்தை அடுத்து ஆறு மணி நேரம் கழித்து செயல்பாடுகள் அனைத்தும் வழக்கத்துக்குத் திரும்பியுள்ளன

விமான நிலையத்தின் சரக்குப் பகுதியில் தீ மூண்டதில் ஒருசில விமானச் சேவைகள் ரத்தாகின, வேறு சில விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

தீச் சம்பவத்தை அடுத்து முதல் விமானம் உள்ளூர் நேரப்படி 9.06 மணிக்குப் புறப்பட்டது.

தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என பங்ளாதே‌ஷ் சிவில் விமானத் துறை, சுற்றுலா அமைச்சு அறிக்கை வெளியிட்டன.

தீக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான நடைமுறைகள் ஆராயப்படும் என்றும் அமைச்சு சொன்னது.

ஹஸ்ராட் ‌‌‌ஷாஜலால் அனைத்துலக விமான நிலையத்தின் சரக்குப் பகுதியில் மூண்ட தீயைக் கட்டுக்குள் கொண்டுவர ஏறக்குறைய 38 தீயணைப்புப் பிரிவுகள் முடுக்கிவிடப்பட்டன.

தீயை அணைக்க ராணுவம், கடற்படை, ஆகாயப்படை ஆகியவையும் ஈடுபடுத்தப்பட்டன.

தீயால் ஏற்பட்ட சேதத்தைத் துல்லியமாக இப்போதைக்கு மதிப்பிடுவது சிரமம் என்ற பங்ளாதே‌ஷ் அனைத்துலக விமான எக்பிரேஸ் சங்கத்தின் தலைவர் கபீர் அகமது, நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்பட்ட நட்டம் 1 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டக்கூடும் என்று தெரிவித்தார்.

எஸ். ரஜீவன்